எங்களுக்கு செய்த கொடூர செயல்களினால் தான் அரசாங்கம் உலக அரங்கில் தலை குனிந்து நிற்கின்றது

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது கடந்த 1995ம் ஆண்டு ஒன்பதாம் மாதம் 22ம் திகதி மேற்கொள்ளப்பட்ட  விமானம் குண்டு வீச்சு  தாக்குதலில் பலியான மாணவர்களின் நினைவாக நிறுவபட்ட நினைவுத்தூபி செவ்வாய்க்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவுத்தூபியினை செவ்வாய்க்கிழமை  பி.ப. 3.30 மணியளவில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் திறந்து வைத்தார்.

நாகர்கோவில் மகா வித்தியாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமான குண்டு வீச்சு தாக்குதலில் பாடசாலையில் கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த 21 மாணவ மாணவிகள் படுகொலையானார்கள். நூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகி இருந்தார்கள்.  இவர்களின் 20வது சிரார்த்த தினம் இன்று இடம்பெற்றது அதில் கலந்துகொண்ட முதலமைச்சரின் உரை இங்குதரப்படுகிறது..


எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற,  இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. 
 
எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற,  இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. என வடமாகாண முதலமைச்சர் சி,வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
 
நாகர் கோவில் மகா வித்தியாலயம் மீது புக்காரா விமானங்களின் குண்டு வீச்சில் உயிரிழந்த 21 குழந்தைகளின்  20வது சிரார்த்த தினம் நாகர்கோவில் மகா வித்தியாலயத்தில் இன்றைய தினம்  மாலை 3.00 அனுஸ்டிக்கப்பட்டது.
 
அந்நினைவு தினத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே முதலமைச்சர் அவ்வாறு தெரிவித்தார். 
 
மேலும் தெரிவிக்கையில்

இன்று ஒரு துன்பகரமான தினம். இற்றைக்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இப்பாடசாலையில் நடைபெற்ற துன்ப நிகழ்வுகளின் வடுக்கள் இன்னமும் நீங்காத நிலையில் பலர் வாடிக்கொண்டிருப்பதை நான் அறிவேன். 
 
இந்த நினைவுத்தூபி திறப்பு விழா நிகழ்விற்கு என்னை கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் திரு.சுகிர்தன் அவர்கள் அழைத்திருந்தார்கள். இந்த சிரார்த்த தினத்தில் இப்பாடசாலைக்கு வருவதற்குக் கால்கள் பின்னடித்தன. 
 
உங்கள் சோகக் கதைகள் மனதை வாட்டுகின்றன. என்றாலும் பறிகொடுத்த நெஞ்சங்களுக்குப் பக்கத்தில் இருந்து ஆறுதல் கூறலாம் என்றே இந்த நிகழ்வில் கலந்து கொள்ள உடனே முடிவெடுத்தேன்.  
 
 
1995ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 22ம் திகதியன்று இந்துக்களின் புனித நாளான வெள்ளிக்கிழமை. மங்கள ஓசைகளுடன் புதிதாய் மலர்ந்த அந்தத்தினம் சகலர் மனதிலும் கனமான ஒரு துயரத்தை தரப் போகின்றதென்பதை அறியாத எமது பிஞ்சுக் குழந்தைகளும் ஆசிரியர்களும் அவ்வாரத்தின் இறுதி நாளாகிய அந்த வெள்ளிக்கிழமையன்று பாடசாலையை நோக்கிச் சென்றனர். 
 
வகுப்புக்களும் உற்சாகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தன. மதிய இடைவேளைக்குப் பின்னர் 12.30 மணிக்கு மாணவர்களும் ஆசிரியர்களும் வகுப்பறைகளுக்குச் சென்ற பின்னரே அக் கொடிய புக்காரா விமானங்கள் வட்டமிடத் தொடங்கின. 
 
சுமார் 875 மாணவர்கள் கல்வி கற்றுக் கொண்டிருந்த இப்பாடசாலை மீது புக்காரா விமானங்கள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. பிள்ளைகள் பயப்பீதியில் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். பாடசாலை அதிபரோ “ஒருவரும் வெளியே போகாதையுங்கோ, பாடசாலைக்குள்ளேயே நில்லுங்கோ” என்று கூச்சலிட்டவாறு மாணவர்களை அடக்கி ஓரிடத்தில் இருத்தத் தெண்டித்தார். 
 
ஆனால் மாணவர்களோ அதிபரின் சொல்லைக் காதில் வாங்கிக் கொள்ளாது அருகாமையிலிருந்த புளியமரம் மற்றும் ஆத்தி மரத்தின்கீழ் பதுங்கினர். அடுத்தடுத்து வீசப்பட்ட குண்டுகளின் மூலம் அப் பிஞ்சுகளை மொத்தமாய் 21 பிள்ளைகளை நாம் கண நேரத்தில் பறி கொடுத்தோம். 
 
இத்துயர சம்பவம் எங்கள் அனைவரதும் இரத்தங்களை உறைய வைத்தது. அழகிய வண்ணாத்திப்பூச்சிகள் போல அங்குமிங்கும் பறந்து திரிந்த இக்குழந்தைகளை கண்ணிமைக்கும் நேரத்தில் தசைக்குவியல்களாய் தரையில் இறைத்து விட்டுச் சென்றன இந்தப் புக்காரா விமானங்கள்.
 
விமானம் வெடிகுண்டு வீசிய அன்றைய தினத்தில் இருந்து இக் கிராமமே சோகமயமாகியது. எங்கும் அவலக்குரல்! மக்கள் இந்தக் கிராமத்தில் தொடர்ந்து சீவிக்க வழி தெரியாது அயற்கிராமங்களை நோக்கி நகர்ந்தனர். 
 
பாடசாலையின் அதிபராக அக்காலத்தில் கடமையாற்றிய திரு.மகேந்திரன் அவர்கள் கடுமையான மனவுளைச்சல் காரணமாக ஒரு நோயாளியாக மாறியிருந்தார் என அறிகின்றேன். 
 
இவ்வாறு பல வழிகளிலும் பாதிப்புற்ற இக் குடும்பங்கள் ஏன், எதற்கு அல்லது எவ்வாறு இவ் அவலங்கள் தமக்கு ஏற்பட்டதென்பதற்கு இன்னமும் விடை தெரியாது கலங்கி நிற்கின்றன. 
 
 
எம் மக்களை கடந்த கால அதிர்ச்சிகள் எந்த அளவுக்குப் பாதித்திருக்கின்றன என்பதை நாங்கள் இதுவரையில் விஞ்ஞான பூர்வமாக ஆராய்ந்தறிய முற்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளை எமது பல்கலைக்கழகமும், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தாரும் சம்பந்தப்பட்ட வைத்தியர் குழாமும் எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். 
 
போரானது ஒன்றுமே அறியாத 21 பிள்ளைகளை காவு கொண்டமை எம் மனதைத் துன்பத்தில் ஆழ்த்துகின்றது. இந்தப் பிள்ளைகளின் பெற்றோரை எப்படி ஆறுதல்ப்படுத்துவது என்று புரியவில்லை. இப் பிள்ளைகள் அகாலத்தில் இறந்து சில நாட்கள் வரையில் இப் பாடசாலையைச் சூழவுள்ள பகுதிகளில் குழந்தைகளின் அழுகைச் சத்தம் கேட்டதாகவுங் கூறப்படுகின்றது. 
 
இம் மண்ணில் பிறந்த அனைவரும் என்றோ ஒரு நாள் இறப்பதென்பது மாற்ற முடியாததொன்று. எனினும் பூவும் பிஞ்சுமாக இடையில் அறுந்து செல்வதென்பது மனவிரக்தியை எமக்கு ஏற்படுத்துகின்றது. 
 
ஒன்றை மட்டும் கூற விரும்புகின்றேன். கர்ம வினைப்படி பார்த்தால் அகால மரணமடைந்த குழந்தைகள் தமது உலக சீவியத்தை முடித்துக் கொண்டு சென்றுவிட்டார்கள். பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் அவர்களின் பெற்றோரும் உற்றார் உறவினருமே. 
 
எமது கர்மவினை தான் எம்மை வாட்டுகின்றன.  
அப்பிள்ளைகள் இன்று உயிருடன் இருப்பார்களேயாயின் அவர்கள் இளைஞர்களாகவும் யுவதிகளாகவும் இந்த மண்ணில் உலாவி வருவதை காணக்கூடியதாக இருந்திருக்கும். ஆனால் எமது சிந்தனையில் அவர்கள் இன்றும் வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்றே கூற வேண்டும். 
 
அவர்களை நாம் மறந்திருந்தால்த்தானே மீள நினைப்பதற்கு! அல்லவா? ஆனால் அவர்கள் இறந்ததால்த்தான் இன்று உலகம் பூராகவும் எமது நிலை பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது! 
 
எங்கள் குழந்தைகளுக்கு ஏற்படுத்திய கொடூரமான, மனிதத்தன்மையற்ற,  இரக்கமற்ற ஈனச் செயல்களே இன்று எமது அரசாங்கத்தை உலக அரங்கிலே தலை குனிய வைத்துள்ளது. 
 
முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்ற மூதுரைக்கு ஏற்ப நடவடிக்கைகள் பல அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் நாம் இழந்த அந்தப் பிஞ்சுகள் இறந்தவை இறந்தவை தான். திரும்ப வரமாட்டார்கள். 
 
 
எனினும் எம் குழந்தைகளின் சிரார்த்த தினமாகிய இன்றைய இந்தத் தினத்தை நாம் நினைவு கூருதல் பொருத்தமானதே! நடந்ததை உலகம் அறிய வேண்டும். 
 
நடந்ததை நினைவு  கூருவதால் எம் மனம் சற்று வேதனை அடங்க வேண்டும். ஆனால் இவ்வாறான ஞாபகார்த்த நிகழ்வுகளை நடாத்துவதுடன் மட்டும் நாம் நின்று விடக்கூடாது. 
 

இப்பகுதியில் வாழக் கூடிய அனைத்து சிறுவர்களதும் குழந்தைகளதும் வாழ்வியல் மேம்பாட்டிற்காக நாம் பாடுபட வேண்டும். அதுதான் இழந்த எம் குழந்தைகளுக்கு நாம் செய்யக்கூடிய கைமாறு. இட்டு உண்டு இருங்கள் என்ற செய்தியை இத்தருணத்தில் உங்களுக்குத் தெரிவித்து கொள்கின்றேன். என தெரிவித்தார்.





 
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila