இந்தியப் பிரதமர் மோடியை விக்னேஸ்வரன் சந்திக்க வேண்டும்


தமிழ் மக்கள் தமிழ் அரசியல் தலைமையால் ஏமாற்றப்படுகின்றனர்.
காணாமல்போனவர்களின் உறவுகளும் தமது சொந்த நிலத்தை இழந்து வாழ வழியின்றி தவிப்பவர்களும் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இவர்களின் தொடர் போராட்டம் பற்றியோ அல்லது அவர்களின் பிரச்சினைக்கு முடிவு கட்டுவது பற்றியோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இம்மியும் கருசனை கொள்ளாமல் உள்ளது.

ஆக, தமிழ் மக்கள் அரசியல் தலைமை இல்லாதவர்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ் மக்கள் நடத்துகின்ற தொடர் போராட்டம் தொடர்பில் கத்திக் குளறி குய்யோமுறையோ  என்று உரத்து ஒலி எழுப்பி எம் மக்களின் போராட்டத்தை உலகறியச் செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தலைமை பேசாதிருக்கிறது.

இதைப் பார்க்கும் போது தொடர் போராட்டம் நடத்துகின்றவர்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லை என்பதாக கூட்டமைப்பின் மன நிலைமை இருக்கிறது என்றே கூற வேண்டும்.

இந்தியப் பிரதமர் மோடி இலங்கைக்கு வருகை தந்த போதாவது எமது மக்களின் தொடர் போராட்டம் பற்றி எடுத்துரைத்திருக்க வேண்டும். ஆனால் அதுவும் நடக்கவில்லை.

எமது மக்களின் பிரச்சினையை ஆணித்தரமாக எடுத்துக் கூறக் கூடிய வடக்கின் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களைக் கூட பிரதமர் மோடியுடனான சந்திப்புக்கு அழைத்துச் செல்லவில்லை.

ஆக, இவற்றைப் பார்க்கும் போது தமிழ் மக்கள் ஏமாற்றப்படுகின்றனர் என்பது உறுதியாகிறது.

எனவே இந்நிலைமை ஆபத்தானது. தமிழ் மக்கள் எந்தத் தீர்வும் இன்றி தாமாக போராட்டத்தைக் கைவிடுவதற்கான ஒரு சூழ்ச்சி நடப்பது உறுதியாகிறது. இதை நம் அரசியல் தலைமை செய்கிறது. 

எனவே இந்த மோசமான சூழ்நிலையிலிருந்து எமது மக்களைப் பாதுகாக்கின்ற அவசிய  அவசர பணி வடக்கின் முதலமைச்சருக்கு உண்டு.

ஆகவே வடக்கின் முதலமைச்சர் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்தித்து தமிழ் மக்களின் அவலங்களை எடுத்துரைத்தாக வேண்டும்.

பிரதமர் மோடி யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்திருந்த போது முதலமைச்சர் விக்னேஸ்வரனை இந்தியாவுக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

எனவே முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமர் மோடியைச் சந்திப்பதற்குத் தயாராக வேண்டும்.

அவர் இந்தியாவுக்குச் சென்று பிரதமர் மோடியைச் சந்திப்பதாக இருந்தால், தமிழ் மக்கள் நடத்துகின்ற தொடர் போராட்டத்துக்கு ஏதோவொரு வகையில் தீர்வு கிடைக்கும்; வெற்றி கிடைக்கும்.

அதேவேளை தமிழ் மக்களுக்கு இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும் போது இதுபற்றியெல்லாம் கூட்டமைப்பு என்னிடம் தெரிவிக்கவில்லையே என்று பிரதமர் மோடி நினைப்பார்.

தவிர இவையாவற்றுக்கும் மேலாக தமிழ் மக்களின் தலைவராக இருப்பதற்கு விக்னேஸ்வரனே பொருத்தமானவர் என்ற முடிவை இந்தியா எடுப்பதற்கும் இது ஒரு நல்ல சந்தர்ப்பமாகும்.

வெற்றியும் ஞானமும் வீரமும் தோல்வியிலும் துன்பத்திலும் இருந்து பிறந்தவை என்பதால்,
கொழும்பில் சந்திக்க முடியாத பிரதமர் மோடியை அவரது நாட்டில் சந்தித்து தான் யார் என்பதை முதலமைச்சர் விக்னேஸ்வரன் நிரூபிக்க வேண்டும்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila