தமிழர்களின் எதிர்பார்ப்பை புரிந்து கொள்ளட்டும் ஜனாதிபதி!

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய இலங்கையின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசியல் தொடர்பில் சில கடும்போக்காளர்கள் துரிதமான பயணத்தை, விரைவான தீர்வுகளை எதிர்பார்க்கிறார்கள், அவர்களின் விருப்பத்துக்கு ஏற்றவாறு செயற்பட முடியாது, துரிதமான பயணம் ஆபத்தானது, கடும்போக்காளர்கள் எதிர்பார்க்கும் துரிதமான உடனடித் தீர்வுகளை வழங்குவதில் உள்ள சிரமங்களை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
போருக்குப் பின்னர் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதில் மைத்திரி அரசு காட்டி வரும் மெத்தனம் அண்மைக் காலமாக உலக நாடுகளின் குறிப்பாக மேற்கு நாடுகளின் விசனத்திற்கு உள்ளாகி வந்தன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரும் இலங்கையின் போக்குக் குறித்து கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதிலும், பொறுப்புக்கூறல் விவகாரங்களில் கொழும்பின் தற்போதைய அணுகுமுறை தொடர்ந்தால் அது பன்னாட்டு நீதிமன்றில் கொழும்பு நிறுத்தப்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும் என்று எச்சரித்திருந்தார்.
தீர்வு பின்தள்ளிப் போவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும் அண்மைய நாள்களில் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்.
இத்தகைய பின்னணியில்தான் கடும்போக்கு வாதிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தீர்வை விரைவாக வழங்க முடியாது என்று பன்னாட்டுச் சமூகத்திடம் தெரிவித்திருக்கிறார் மைத்திரிபால சிறிசேன.
தீர்வை விரைவாக வழங்க வேண்டும் என்று எந்தச் சிங்களத் தரப்பினருமே வலியுறுத்தவில்லை. தமிழர்கள் மட்டுமே வலியுறுத்துகிறார்கள்.
தமிழர்களிலும் கடும்போக்கு வாதிகள் என அடையாளப்படுத்தப்படுவோர் தீர்வு என்று கூறிக்கொண்டு அரசும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மக்களை ஏமாற்றுகின்றன என்று கண்டிக்கிறார்களே தவிர, தீர்வை விரைவாக அரசு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நடந்து கொள்ளவில்லை. தமிழ் மக்கள் விரும்பும், ஏற்றுக்கொள்ளும் தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டும் என்பதைத்தான் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
அப்படியிருக்கும்போது கடும்போக்கு வாதிகள் என்று ஜனாதிபதி மைத்திரிபால யாரைக் குறிப்பிட்டுக் கூறுகின்றார் என்பது தெளிவில்லாமலேயே இருக்கிறது.
தீர்வு விரைவுபடுத்தப்பட வேண்டும் என்றும் அதன் மூலம் தமது இயல்பு வாழ்வு திரும்ப வேண்டும் என்றும் தமிழ் மக்கள் அனைவருமே விரும்புகிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். அப்படியானால் தமிழ் மக்கள் அனைவரையும் தான் மைத்திரிபால சிறிசேன கடும்போக்கு வாதிகள் என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்.
விரைவான தீர்வை விரும்பும் தமிழர்கள் அனைவரையும் அப்படி கடும்போக்கு வாதிகளாகக் குறிப்பிடுவதற்கு முன்னர் ஜனாதிபதி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும், அது தமது அரசியல் பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காண 60 வருடங்களுக்கும் மேற்பட்ட காலமாகத் தமிழ் மக்கள் காத்திருக்கிறார்கள்.
கடந்த 30 ஆண்டுகளாக நடந்த ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழர்களின் அரசியல் போராட்டமல்ல. அதற்கு முன்னாள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அவர்கள் அரசியல் தீர்வு ஒன்றை எதிர்பார்த்திருக்கிறார்கள். அதற்காகப் போராடுகிறார்கள்.
அதற்கான அறவழிப் போராட்டங்கள் கொழும்பு அரசுகளால் அடக்கு முறைக்குள்ளாக்கப்பட்ட போது தான் ஆயுத, வன்முறை வழியில் 30 ஆ்ண்டுகள் போராடினார்கள்.
எனவே போர் முடிந்த 7 வருடங்களாக மட்டுமே தமிழர்கள் தீர்வுக்காகக் காத்திருக்கிறார்கள், அவ்வளவு விரைவாகத் தீர்வைத் தர முடியாது என்று அரசியல் தலைவர்கள் கருத்துத் தெரிவிப்பது பிரச்சினையின் அடிப்படையை அவர்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதன் அடையாளமாகும்.
பிரிட்டிஷாரின் பிடியில் இருந்து விடுபட்ட இலங்கையின் நவீன வரலாறு முழுவதுமே தமிழர்கள் அரசியல் தீர்வுக்காகக் காத்திருக்கிறார்கள் என்பது ஒரு தலைமுறையின் மொத்தக் காலம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila