எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாளிகளாவது பொதுமக்களே! பனங்காட்டான்

Sampanthan-Sumanthiran

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விபரங்களைச் சேகரிக்க புதிய படிவங்கள் நிரப்பி அனுப்புங்கள் என்று கூறுவதற்கு அவர்களின் உறவினர்களை ஜனாதிபதி கொழும்புக்கு அழைத்து கூட்டம் நடத்தியதானது காலத்தை மேலும் இழுத்தடிக்கும் அடுத்த சுற்று நாடகத்தின் ஆரம்பம்.
காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்தை இழுத்தடிக்க ஜனாதிபதி ஆரம்பித்திருக்கும் அடுத்த சுற்று நாடகம்;
அரசியலமைப்பின் இடைக்கால அறிக்கையில் கண்களுக்குப் புலப்படாதிருக்கும் சமஷ்டி பற்றிய தமிழ் அரசியலாளர்களின் கண்டுபிடிப்பு;
முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவிக்கும் காரசார கருத்துகளை மறுக்க முடியாதிருக்கும் கூட்டமைப்புத் தலைவரின் நிலைமை;
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டிருக்கும் கூட்டமைப்பின் நிலைப்பாடு என்பன கடந்த சில நாட்களின் முக்கிய அரசியல் சாமாசாரங்கள்.
இவைகளை ஒவ்வொன்றாகச் சற்று அலசுவோம்.
வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களைக் கடந்த வியாழக்கிழமை தமது அலுவலகத்துக்கு அழைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுடன் கலந்துரையாடல் நடத்தினார்.
மிகுந்த நம்பிக்கையுடன் கொழும்பு சென்ற அந்த உறவினர்கள், எதிர்பாராத ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக மீண்டும் விசாரணைகளை முன்னெடுப்பதற்கு சகல மாவட்ட செயலகங்களுக்கும் தாம் உத்தரவிட்டுள்ளதாக இங்கு தெரிவித்த ஜனாதிபதி, அதற்குரிய படிவங்களைச் செயலகங்களில் பெற்று டிசம்பர் மாதம் 15ம் திகதிக்கு முன்னர் நிரப்பிக் கொடுக்குமாறு அவர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஒற்றை வரியில் சொல்ல வேண்டிய விடயத்துக்கு அந்த உறவினர்களை கொழும்புக்கு அழைத்து ஜனாதிபதி இவ்வாறு ஏமாற்றியிருக்கக் கூடாது.
ஊடகங்களில் படம் காட்டவும், சர்வதேசத்தைப் பேய்க்காட்டவும் ஜனாதிபதிக்கு இந்த நாடகம் தேவைப்பட்டிருக்கலாம்.
மைத்திரிபால சிறிசேன முக்கிய அமைச்சராகவிருந்த மகிந்த ராஜபக்சவின் ஜனாதிபதிக் காலத்தில், முன்னாள் நீதிபதி பரணகம தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டோர் விசாரணைக்குழு நியமிக்கப்பட்டதும், இவர்கள் வடக்கு கிழக்குக்குச் சென்று உறவினர்களின் வாக்குமூலங்களைப் பெற்றதும் இந்தத் தசாப்தத்தில் நடந்ததுதான்.
மூன்றாண்டுகள் வரையில் விசாரணை நடத்திய இந்தக் குழு தனது அறிக்கையை மகிந்தவிடம் கையளித்ததும், அது குளிர்சாதனப் பெட்டிக்குள் வைக்கப்பட்டதும் மைத்திரிக்குத் தெரியாததல்ல.
ஜனாதிபதி பதவிக்கு வந்த மைத்திரி காணாமல் ஆக்கப்பட்டோர்களுக்கென தனியான ஓர் அலுவலகம் அமைத்து மாதங்களாகிவிட்டது, இது முழுமையாக இயங்கவென புதிய வரவு செலவுத் திட்டத்தில் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இப்படியாகக் காலம் கடத்தி வந்த சிங்கள அரசாங்கம் இப்போது இன்னொரு தடவை படிவம், பதிவு, மீள்விசாரணை என்று இன்னொரு சுற்று நாடகத்தை ஆரம்பித்திருப்பதன் நோக்கம் என்ன?
கண்ணாமூச்சி விளையாட்டின் மற்றொரு கட்டந்தான் இதுவென்று சொல்லலாம்.
புதிய அரசியலமைப்புத் தொடர்பாக, அதன் வழிகாட்டிக் குழு வெளியிட்ட இடைக்கால அறிக்கையில் சம~;டி இல்லை, வடக்கு கிழக்கு இணைப்பும் இல்லை. இது எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்.
கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களாக கோடீஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிறிதரன் ஆகியோர் இதனை பகிரங்கமாகவே கூறி வருகின்றனர்.
ஆனால், கூட்டமைப்பின் பேச்சளரான எம்.ஏ.சுமந்திரன் இது தொடர்பாக வித்தியாசமான ஒரு கருத்தை அண்மையில் தெரிவித்தார்.
ஷஇதற்குள் சம~;டிப் பண்பு இருக்கிறது| என்பது இவர் தெரிவித்த கருத்து.
கூட்டமைப்புக்குள் இருக்கும் பலருக்கும் இவர் என்ன சொல்கிறார் என்பது புரியவில்லை. அதற்காக அதுபற்றி அவரிடம் விளக்கம் கேட்கவும் தயாராகவில்லை.
மற்றவர் எவரது கண்ணுக்கும் புலப்படாத சம~;டிப் பண்பை எந்த பூதக்கண்ணாடி கொண்டு சுமந்திரன் பார்த்தாரோ தெரியவில்லை.
இந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற தமிழ் பத்திரிகைகளின் ஆசிரியர்கள் சந்திப்பில் சம்பந்தன் சம~;டி சம்பந்தமான மற்றொரு கருத்தை உதிர்த்தார்.
“இந்தத் தீர்வில் சம~;டி அலகு என்ற பெயர் இருக்காது. ஆனால் சம~;டிக்குரிய அனைத்தையும் அது கொண்டிருக்கும்” என்பது இவரது விளக்கம்.
சுமந்திரன் சம~;டிப் பண்பு இருக்கிறது என்கிறார். சம்பந்தன் சம~;டிக்குரிய அனைத்தும் இருக்கும் என்கிறார்.
இவர்கள் இருவரும் தங்களுக்குத் தாங்களே தலைப்பாகை கட்டுகிறார்களா அல்லது தங்களுக்குள் மாறி மாறித் தலைப்பாகை கட்டுகிறார்களா என்பது தெரியவில்லை.
நம்பிக்கையின் அடிப்படையில்தான் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக மீண்டும் கூறியுள்ள சம்பந்தன், தீர்வைக் குழப்பினார்கள் என்ற அவப்பெயர் தங்களுக்கு வரக்கூடாது என்பதில் மிகக் கவனமாக செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இப்படிக் கூறுவதன் அர்த்தம் என்னவாம்?
ஒருபோதும் தீர்வு வராது என்பதைத் தெரிந்து கொண்டும், அதனை குழப்பியவர்கள் என்ற கெட்ட பெயர் கூட்டமைப்புக்கு வரக்கூடாது என்பதில்தான் இவர்கள் அக்கறை கொண்டுள்ளனர் என்றுதானே இதன் அர்த்தம்.
மைத்திரியும் ரணிலும் ஒருவரோடொருவர் நம்பகத்தன்மை இழந்து மோதிக் கொள்ளும் நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது.
ரணிலின் நம்பிக்கைக்குரிய அவரது கட்சியின் சில அமைச்சர்களை மெதுவாகக் கழற்றிவிடும் நடவடிக்கையை மைத்திரி ஆரம்பித்துள்ளார்.
மறுபுறத்தில், தேர்தல் வாக்குறுதியின்படி ஜனாதிபதி முறைமையை நீக்கும் நடவடிக்கைகளை தாமதிக்கக்கூடாதென ரணிலின் சகபாடி அமைச்சர்கள் மைத்திரியை நெருக்க ஆரம்பித்துள்ளனர்.
இந்த நிலையில் கூட்டமைப்பு யார் மீது நம்பிக்கை வைக்கிறது? இருவரின் நிலையுமே பொறிக்கிடங்குதான்.
அண்மைய நாட்களில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துவரும் காட்டமான கருத்துகள் கூட்டமைப்பை மட்டுமன்றி அனைவரையும் அதிர்வடைய வைக்கின்றன.
புதிய கூட்டணியொன்றை உருவாக்க எத்தனிக்கும் சுரே~; பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் முதலமைச்சர்மீது காய ஆரம்பித்துள்ளனர். தமிழ் மக்கள் பேரவையுடனும் கொஞ்சம் முறுகல்தான்.
எல்லாவற்றுக்கும் மேலாக, கூட்டமைப்பின் தலைமை நம்பிக்கை வைத்திருக்கும் நல்லாட்சி அரசை வன்மையாகக் கண்டிக்கும் அறிக்கைகளை முதலமைச்சர் விக்னேஸ்வரன் தினசரி வெளியிட்டு வருகிறார்.
இது தொடர்பாக ஊடகவியலாளர்கள் தொடுத்த கேள்விக்கு சம்பந்தன் அளித்த பதில் சற்று வித்தியாசமானது.
“தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அப்படியான கருத்து இருக்கிறது என்பதை தென்னிலங்கை தெரிந்து கொள்ள இது உதவுகிறது. தனது கருத்தைத் தெரிவிக்கும் முழு உரிமையும் முதலமைச்சருக்கு உண்டு. அவர் அப்படியாகக் கூறுவதும், நாங்கள் நம்பிக்கை வைத்து தீர்வுக்கு முயற்சிப்பதும் ஒரே சமயத்தில் நடப்பது நல்லதுதானே” என்பது சம்பந்தனின் பதிலாக அமைந்தது.
இது முதலமைச்சரை பகைத்துக் கொள்ள விரும்பாத சாணக்கியமா? அல்லது இருவரும் கச்சிதமாக திட்டமிட்டு நடத்தும் ஒருவகை நாடகமா?
அடுத்த மாகாணசபைத் தேர்தலின்போது இதற்கான விடை நிச்சயமாகக் கிடைக்கும்.
இறுதியாக, இலங்கையின் வரவு செலவுத் திட்டத்தைக் கவனிப்போம்.
இது சமர்ப்பிக்கப்பட்ட மறுநாளே இதனை வரவேற்ற சம்பந்தன் மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இதில் தெரிவிக்கப்பட்டவை முழுமையாக நிறைவேற்றப்பட்ட பின்னரே கருத்து கூற முடியுமென்றார் சுமந்திரன்.
வரவு செலவுத் திட்டத்தை ஆதரித்து கூட்டமைப்பு வாக்களிக்கக் கூடாதென்று இதன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தலைமைப்பீடத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.
கடந்த வார இறுதியில் நடைபெற்ற கட்சியின் கூட்டமொன்றில் பலரும் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுமந்திரன், வரவு செலவுத் திட்டத்தை ஆதரிப்பதா இல்லையா என்பது பற்றி முடிவெடுக்கப்படவில்லையெனப் பதிலளித்தார்.
இதன் மீதான இரண்டாவது வாக்களிப்பு நவம்பர் 16ம் திகதி நடைபெற்றபோது, கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து ஆதரவாக வாக்களித்து 98 மேலதிக வாக்குகளால் இதனை நிறைவேற்றியது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் சிவசக்தி ஆனந்தன் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. கூட்டமைப்பின் எம்.பியான சரவணபவன் வெளிநாடு சென்றிருந்ததால் அவரும் வாக்களிக்கவில்லை.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் பெயரளவில் மட்டும் கூட்டமைப்பு எதிர்க்கட்சியாக இருக்கிறது. ஆனால்,ஆளும் தரப்பின் ஒரு பங்காளியாக இது தொடர்ந்து செயற்பட்டு வருவது இங்கும் நிரூபணமாகியுள்ளது.
எத்திப் பிழைக்கும் அரசியலில் ஏமாறுபவர்கள் எப்போதும் பொதுமக்களே!
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila