யார் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக பணிபுரிகின்றார்களோ அவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று அழைக்கின்றோம்

மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் பிறந்த நாள்  நினைவு நிகழ்வுகள்
துர்க்கா மணி மண்டபம், நல்லூர், யாழ்ப்பாணம்
11.12.2017 திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில்
பிரதம அதிதி உரை
குரூர் ப்ரம்மா……………………………………..
இன்றைய நிகழ்வின் தலைவர் அவர்களே, இந்த நிகழ்வை சிறப்பிப்பதற்காக இங்கே வருகை தந்திருக்கும்  சிறப்பு அதிதிகளே, உயர் அதிகாரிகளே இந்திய பிரதித் தூதுவராலய அதிகாரிகளே, சகோதர சகோதரிகளே, குழந்தைகளே!
இந்தியக் குடியரசின் யாழ்ப்பாணத்திற்கான  பிரதித் தூதுவர் திரு.நடராஜன் அவர்களின் ஏற்பாட்டில் துர்க்கா மணிமண்டபத்தில் நடைபெறுகின்ற மகாகவி சுப்ரமணிய பாரதியார் அவர்களின் 135 வது பிறந்தநாள் நினைவு நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மகிழ்வடைகின்றேன.;
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் விடுதலைப் போர்க் கவிதைகள் வாயிலாக மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஊட்டிய சுப்ரமணிய பாரதியார் அவர்கள் ஒரு பிறவிக் கவிஞர். பாடாமல் இருக்க முடியாமை பாரதியாரின் பிறவிக் குணம் என்று கூறலாம். அவருக்கு மனதில் ஒரு எண்ணம் உதிக்குமானால் அக்கணமே அவ்வெண்ணம் பாடல்களாய் குதிப்பன. ஆனால் நாம் ஒன்றை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். பாடல்கள் மூலமான இலக்கியக் கருத்துப்பரிமாற்றமே சென்ற 19ம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்து வந்தது. வசன நடைமுறை 19ம் நூற்றாண்டின் மத்தியில்த்தான் நடைமுறைக்கு வந்தது. பிரதாப முதலியார் சரித்திரம் என்ற வசன நடை நாவல் 1857ல் எழுதப்பட்டு 1879ல் பிரசுரிக்கப்பட்டது. அது வரையில் பாடல்களாக வெளிவந்த எமது இலக்கியம் இந்த நூலுடன் தான் வசன நடையை உள்ளேற்றது.
பாலர் பாடுவது தொடக்கம் பண்டிதர்கள் வரை யாவரையும் இனிக்க வைத்தன பாரதியாரின் பாடல்கள். பாடல்களைப் போன்றே அவரின் வசனங்களும் புத்தம் புதியனவாகப் பரிணமித்தன. உலக மொழிகள் பலவற்றிலே பாரதியின் ஆக்கங்கள் மொழிபெயர்க்கப் பட்டிருக்கின்றன. பாரதி சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் அவர் பற்றிய அறிமுக நூல்களின் தோற்றம் யாவும் பாரதியின் புகழ் உலகளாவிய ரீதியில் வளர்ந்து வருவதைக் காட்டுகின்றன. மலைத் தொடரிலே கொடுமுடிகள் ஆங்காங்கே உயர்ந்தெழுந்து நின்று கோலம் காட்டுவதுபோல சில இலக்கிய கர்த்தாக்கள் தமது ஈடிணையற்ற திறமைகளினாலும் தனித்துவமான சாதனைகளாலும் ஏனையோர்களிலும் பார்க்க ஏற்றம்பெற்று விளங்குகின்றனர். அவர்களுள் சிலர் யுகபுருஷர்களாகவும் போற்றப்படுகின்றனர். பாரதி அத்தகைய பெரும் புருஷர்களில் ஒருவர். காலம் தாழ்ந்தேனும் அவரின் திறமைகளையும் சிறப்பியல்புகளையும் உலகம்  கண்டு கொண்டமை அவரின் புலமைக்கிருந்த உள்ளார்ந்த சிறப்பை எடுத்துக் காட்டுகின்றது.
பொதுவாக மனிதர்களை மாபெரும் பிரச்சனைகள் கடுமையாக எதிர் கொள்கின்றன. மற்றவர்களை விட யார் இந்தப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு உதவியாக அதிகமாக பணிபுரிகின்றார்களோ அவர்களைத்தான் மகாபுருஷர்கள் என்று நாம் அழைக்கின்றோம். சுப்ரமணிய பாரதி தனது காலத்தில் அல்லது யுகத்தில் கலை, இலக்கிய, சமூக, அரசியல் மற்றும் தத்துவப் பிரச்சனைகளை தீர்ப்பதற்குப் பெருமளவில் உதவியவர் என்பதனாலேயே அவரை மகாகவி என்றும் யுகக்கவி என்றும் போற்றுவதோடு வருடா வருடம் அவரை நன்றியுணர்வுடன் நினைவு கூருகின்றோம்.
பாரதியின் தோற்றம் மற்றும் அவருக்குள் உட்புகுந்துகொண்ட விடுதலை உணர்வுகள் பற்றி  சற்றுத் திரும்பிப் பார்ப்போமானால் –
1882 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் நாள் எட்டயபுரத்தில் சின்னச்சாமி ஐயருக்கும்  லட்சுமி அம்மாளுக்கும் மகனாக பாரதி அவதரித்தார். தாய் தந்தையர் இவருக்கு இட்ட பெயர் சுப்ரமணியன் . செல்லமாக சுப்பையா என அழைக்கப்பட்ட இவருக்கு ‘பாரதி’ என்பது இவரது அறிவாற்றலுக்கும் கவிதை புனையும் ஆற்றலுக்கும் கிடைத்த பட்டப் பெயர். சுப்ரமணியனுக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அதாவது 1887ல் அவர் தமது தாயாரை இழந்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து தந்தையார் மறுமணம் செய்து கொண்டார். அதே வருடத்திலேயே குல மரபுப்படி இவருக்கு பூணூல் சடங்கும் நடைபெற்றது. இள வயதிலேயே கவி பொழியும் ஆற்றலைப் பெற்ற இவர் நாவில் தமிழ் அன்னையே நர்த்தனம் புரிவதாக அனைவரும் பேசிக் கொண்டனர்.
1893ல் பதினொரு வயதை மட்டுமே எட்டிப் பார்த்த இவரது கவித்திறன் எட்டையபுரம் மன்னரின் காதுகளுக்கு எட்டியது. எட்டையபுரம் சமஸ்தான புலவர்கள் சபையில் சுப்ரமணியனின் கவித்திறன் பாராட்டப்பட்டு ‘பாரதி’ என்ற பட்டப் பெயர் வழங்கப்பட்டது. பதினொரு வயது சிறுவனுக்கு பாரதி என்ற பட்டப் பெயரா? தமிழ் அறிந்தோர் ஆச்சரியப்பட்டனர்.
அக் கால வழக்கப்படி பாரதியாருக்கும் பாலிய வயதுத் திருமணம் முடிவு செய்யப்பட்டு பதின்நான்கு வயது மட்டுமே நிறைவடைந்த இவருக்கு செல்லம்மாள் என்னும் 7 வயது சிறுமி மனைவியாக வாய்த்தார். பாலிய வயது திருமணத்தை அறவே வெறுத்த பாரதியார் பின்னாளில்
‘பாலறுந்த மழலையர் தம்மையே கோலமாக
மணத்திடைக் கூட்டும் இப்பாதகர்கள்
இன்னும் ஆயிரம் ஆண்டு அடிமைகளாக
இருந்து அழிவர்.’             எனச் சபித்தாராம்.
பாரதிக்கு பள்ளிப்படிப்பு வேப்பங்காய் போல் கசந்தது. 9ம் வகுப்பு வரை படித்த பாரதியார் கவிதைகள் புனைவதிலேயே முனைப்புடன் ஈடுபட்டார். அப்போதே தமிழ்ப் பண்டிதர்களுடனும் வித்துவான்களுடனும் சொற்போர் புரிய ஆரம்பித்து விட்டாராம்.
திருமணமாகி சரியாக ஓராண்டு கழித்து 1898 ல் தந்தையாரான சின்னச்சாமி ஐயரையும் இழந்தார். இதனைத் தொடர்ந்து இவர் வாழ்வில் பல கஸ்டங்களும் பணமுடைகளும் ஏற்பட்ட நிலையில் காசிக்குச் சென்று அத்தையாரின் உதவியுடன் அலகபாத் சர்வகலாசாலையில் புகுமுகத்தேர்வில் முதல் மாணவனாக சித்தி பெற்று வடமொழியுடன் இந்தியையும் அங்கு கற்றுக் கொண்டாராம்.
பாரதியின் மொழியாற்றல் பற்றி குறிப்பிடுவது என்றால் அவர் வடமொழி, இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், துலு, இலத்தீன், பிரெஞ், ஆங்கிலம் ஆகிய பல மொழிகளில் பன்மொழித் தேர்ச்சி பெற்றிருந்தார். 29 இந்திய மொழிகளையும் மூன்று சர்வதேச மொழிகளையும் அவர் கற்றிருந்தார். அந்த அடிப்படையில்த் தானோ என்னவோ அவர் பின்னாளில்
‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்.’ என்று பாடினார். பாரதி ஒரு பன்மொழித் தேர்ச்சியாளர் என்ற வகையில் அவர் யாமறிந்த மொழிகளில் எனக்குறிப்பிட்டது சாலப் பொருத்தமானதாய் அமைந்தது.
பாரதியாரின் பாடல்கள் கூடுதலாக குழந்தைகளை மையப்படுத்தியதாகவே அமைந்திருந்தன ‘ஓடிவிளையாடு பாப்பா நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
கூடி விளையாடு பாப்பா ஒரு குழந்தையை வையாதே பாப்பா’
என பாப்பா பாட்டு பாடினார்.
இப்பாடல் இளைஞர்களுக்கும் வயது வந்தவர்களுக்குங் கூடப் பொருந்தும். ‘நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ என்ற கூற்றின் தாற்பரியம் அண்மைக்காலத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. சிலரை ஓய்ந்திருக்க  விட்டமையால் பலபல தீங்குகள் எம்மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. காணிகள் சுவீகரிப்பு, போதைப் பொருள் விற்பனை, பாலியல் அச்சுறுத்தல்கள், திட்டமிட்ட குடிப்பரம்பல், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளில் குழப்பம் ஏற்படுத்தல் – இவை அனைத்திலும் ஓய்திருந்தோர் கைவரிசை தெரிவதாகப் புலப்படுகிறது. இவற்றினால் எம் மக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். ஆனால் அச்சம் வேண்டாம் என்றார் பாரதி அன்றே-
‘அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே’ என்றார்.
பாரதியின் பாடல்கள் படிக்கப் படிக்கத் தித்திக்கும். அவர் பாடாத தலைப்புக்களே இல்லை எனலாம். காதலைப்பற்றி, நட்பு, ஒழுக்கம், வீரம், தீண்டாமை என அனைத்தையும் பற்றிப் பாடியவர் சிட்டுக்குருவிக்குக் கூட பாட்டெழுதியிருக்கின்றார்.
‘எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி இருந்ததும் இந்நாடே’ என்று தமது நாட்டின் பெருமையைக் கூற வந்த அவர், ‘என்று தணியும் இந்த சுதந்திர தாகம்’ என்று சுதந்திர வேட்கை மிகுதியால் ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெறும் அந்த நன்நாளை எதிர்பார்த்து அதற்கும் பாடல் செய்திருந்தார்.
எப்போது அதர்மம் நடந்தாலும் யாரோ ஒருவர் வந்து அதர்மம் செய்பவர்களைத்  தட்டிக்கேட்கத்தான் செய்வார். அதற்காக ஆளும் வர்க்கத்தினர் உண்மையை உரத்துப் பேசுபவனை அழிக்க நினைப்பது ஆட்சியாளர்களின் தனிப்பாங்கு. பாரதி இதற்கு விதிவிலக்கல்ல. ஆட்சியாளர்களுடன் பாரிய முரண்பாடுகளைச் சந்தித்தார்.
இந்திய தேசியக் காங்கிரசின் மிகத் தீவிர உறுப்பினராகத் திகழ்ந்தார் பாரதியார். 1908ல் அவரை எங்கிருந்தாலும் கைது செய்ய ஆங்கிலேயர்கள் பிடியாணை பிறப்பித்தார்கள். இதன் பொருட்டு பாரதியார் பிரெஞ்சு அதிகாரத்தின் கீழ் இருந்து வந்த புதுக்சேரிக்குத் தப்பிச் சென்றார். 1918ம் ஆண்டு வரை அங்கேயே காலத்தைக் கழித்தார்.
பாரதிக்கு உயர்குலம், தாழ்குலம், மொழி, மதம் ஆகிய எந்த வேறுபாடுகளும் கிடையாது. மக்களை வெகுவாக நேசித்தவர் அவர். குறிப்பாக பெண்கள் அடக்கு முறைக்கு எதிரான கோஷம் எழுப்பினார். பெண்கள் கல்வியில் ஆர்வம் காட்டினார். 1905ம் ஆண்டில் காசியில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகா நாட்டில் பங்குபற்றிவிட்டு வரும் வேளையில் ளுளைவநச Niஎநனவையவைச் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. சுவாமி விவேகானந்தரின் ஆத்மீக சிஷ;யை ஆகிய அவர், பெண்கள் விடுதலை பற்றி பாரதியாரிடம் வலியுறுத்தினார். அதன் பயனாக சக்தியின் வடிவாகப் பெண்களைப் பார்க்கத் தொடங்கினார் பாரதியார்.
1918ம் ஆண்டில் இந்தியாவினுள் கடலூர் மூலமாக நுழைந்த அவரைப் பிரித்தானிய அரசாங்கம் கைது செய்ய மூன்றுவாரங்கள் கடலூர் மத்திய சிறையில் கிடந்தார். அன்னி பெசன்ட் அம்மையார், சேர் ஊ.P.இராமசுவாமி ஐயர் ஆகியோரின் சிபார்சின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டார். இக் கால கட்டத்தில் அவரை நோயும் வறுமையும் வாட்டியது. 1919ல் மகாத்மாகாந்தியை அவர் சந்தித்தார்.
1921 யூலை மாதத்தில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானையின் கோபத்திற்கு இலக்காகி தாக்கப்பட்ட நிலையில் செப்ரம்பர் 11;ம் திகதி நள்ளிரவு தாண்டி 12 ம் தேதி அதிகாலை 1.30 மணிக்கு பாரதியார் இவ்வுலக வாழ்வு நீங்கினார். இறக்கும் போது பாரதியாருக்கு 39 வயது மட்டுமே. இன்று உலகம் போற்றும் கவிஞராகத் திகழும் பாரதியாரின் இறுதிச்சடங்கு வைபவத்தில் 14 பேர்களே கலந்து கொண்டதாக கூறப்படுகின்றது.
பாரதி பாடாத  பொருளே இவ்வுலகில் இல்லை எனலாம். இதனால்த்தான் பாரதியாரை உலகக் கவிஞன், உண்மைக் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன், உரிமைக் கவிஞன், தெய்வக் கவிஞன், விடுதலைக் கவிஞன், காதற் கவிஞன், சுதந்திரக் கவிஞன் என்ற பல்வேறு பெயர்களால் உலக மக்கள் மகிழ்வுடன் அழைக்கின்றனர்.
பாரதியாரின் பாடல்களை முதன் முதலில் அச்சிட்டு வெளியிட்ட நெல்லையப்பர் என்பவர் அவரின் பாடல்வரிகளையும் அதில் உட்பொதிந்த விடுதலை உணர்வுகளையும் பின்வருமாறு குறிப்பிட்டார்.
‘பாரதியின் காலத்திற்குப் பின், எத்தனையோ
நூற்றாண்டுகளுக்குப் பின், தமிழ்நாட்டு
ஆண்களும் பெண்களும் அவர் பாடல்களைப் பாடி
மகிழும் காட்சியை நான் இப்பொழுதே (ஞானக்கண்களினால்)
காண்கின்றேன்’  என்றார்.
அன்று நெல்லையப்பர் ஞானக்கண்ணினால் உய்த்தறிந்த காட்சியை மக்கள் ஊனக்கண்ணினால் இன்று காணக் கூடியதாய் இருக்கின்றது. பாரதியின் நினைவு நாள் இன்று. அவரின் பாடல்கள் ஒரு புறமும் கருத்துக்கள் மறுபுறமும் எம்மை ஆக்கிரமிப்பதாக! அவரின் பாடல்களைப் பாடி மகிழ்வோம். அவரின் கருத்துக்களை நடைமுறைப்படுத்தி வாழ்வோம்! இந்த நல்ல நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பளித்தமைக்காக எனது நன்றிகளைத் தெரிவித்து விடை பெறுகின்றேன்.
நன்றி.
வணக்கம்
நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன்
முதலமைச்சர்
வடமாகாணம்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila