மக்களின் அன்றாடப்பிரச்சினைகளிற்காகவே கூட்டாம்:சிவசக்தி ஆனந்தன்.



உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமையாகுமென புதிய விளக்கமளித்துள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்.


பெரும்பான்மையின கட்சிகளுடன் இணைந்து வவுனியா நகரசபையினை கைப்பற்றியமை கடுமையான சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.
இதனையடுத்து கருத்து வெளியிட்டுள்ள அவர்  நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ள உள்ளுராட்சி மன்றங்களை சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகும்.


கட்சி ரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப வேண்டும்.


வடக்கு-கிழக்கைப் பொறுத்தவரை, எட்டு மாவட்டங்களும் தமிழ்த் தேசிய இனவிடுதலைப் போராட்டத்தின் காரணமாக நேரடியாகவோ மறைமுகமாகவோ மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, எமது உரிமைப் போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் அதேவேளை, எமது பிரதேச மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதும் எமது தலையாய கடமையாகும். நாளாந்த விடயங்களில் மட்டுமே கவனம் செலுத்த உள்ள உள்ளுராட்சி மன்றங்களை சிலர் தமது சுயநலன்களுக்காக தேசிய இனப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்தியதன் விளைவே நாடு இன்று எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு மூலகாரணமாகும்.



எது எப்படி இருப்பினும், நடந்தவைகளை மறந்து, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர்கள் அனைவரும் எமது பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கணக்கிலெடுத்து, அனைவரும் ஒன்றிணைந்து கிராமங்கள், நகரங்கள் ஆகியவற்றின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துவதுடன், எமது பிரதேசத்தின் அனைத்து கிராமங்களும் சுகாதாரத்தில் தன்னிறைவு பெற்றதாகவும் ஆரோக்கியமிக்கதாகவும் மாற்றியமைக்க முன்வரவேண்டும்.



தலைவர் பதவிகளுக்கான தேர்தல்களின்போது நடைபெற்ற விடயங்களைத் தூக்கிப்பிடிக்காமல், இனி அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து, ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, பணிகளை முன்னுரிமை அடிப்படையில் பட்டியலிட்டு கூடியவரையில் வினைதிறன் மிக்க செயற்பாட்டை முன்னெடுப்பதே நாம் எம்மை தேர்ந்தெடுத்த மக்களுக்குச் செய்யும் நன்றிக்கடனாகும்.


அபிவிருத்திப் பணிகளில் வட்டார, கட்சி, இன, மத பேதங்களை மறந்து சபைகளில் உள்ள நிதிகளை முறையாகக் கையாண்டு நீடித்திருக்கும் அபிவிருத்திப் பணிகளை அனைத்து பிரதேசங்களுக்கும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு அனைத்து உறுப்பினர்களும் உறுதிபூண வேண்டும்.
அதே நேரம், மிகவும் பின்தங்கிய வட்டாரத்தின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்பும் விதத்தில் அதன் உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து அதற்கேற்ப செயற்பட முன்வரவேண்டும். கட்சிரீதியாக நாம் பிரிந்திருந்தாலும் நாம் தமிழ்த் தேசிய இன மக்கள் என்பதை நினைவிற்கொண்டு யுத்தத்தால் அழிவடைந்துள்ள எமது கிராமங்களை பற்றுறுதியுடன் மீளக் கட்டியெழுப்ப ஒவ்வொருவரும் உறுதி பூணுவோம்.


இருக்கின்ற நிதிவளங்களைக் கொண்டு உங்கள் பணிகளை மேற்கொள்கின்ற அதேநேரம், மேலும் சில அத்தியாவசிய பணிகளுக்கு நிதிப்பற்றாக்குறை நிலவுகையில், மாகாண சபை உறுப்பினர்கள் மூலமோ, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமோ மேலதிக நிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு எமது பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்ப திடசங்கற்பம் பூணுவோம்.

உள்ளுராட்சி தேர்தல்களில் பலர் பல்வேறு காரணங்களுக்காக பல கட்சிகளில் இணைந்து போட்டியிட்டிருக்கக்கூடும். அவைகளை மீட்டிப்பார்த்து பகைமை பாராட்டும் நேரம் இதுவல்ல என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். கோரமான வறுமையிலும், போதிய சுகாதாரமற்ற சூழலிலும் வாழும் எமது மக்களை அவற்றிலிருந்து விடுவிப்பதே எமது தலையாய பணியாக இருக்க வேண்டும். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் அதற்காகவே நடத்தப்படுகின்றன. போட்டியிட்ட ஒவ்வொருவரும் அந்த நோக்கத்திற்காகவே போட்டியிட்டீர்கள். எனவே நாம் எமது மக்கள் எமக்கு வழங்கிய ஆணையை நிறைவேற்ற உறுதிபூணுவோம்” என தெரிவித்துள்ளார்.
Share this article :
Print PDF
 
Support : Eelam5.com | Untamil.com | News4tamil.com
Powered by Eelanila
Copyright © 2011. ஈழநிலா.கொம் - All Rights Reserved
Eelanila.com
Design by: Nilavan Published by: Eelanila